நமஸ்காரம்.
கடந்த 13-10-2024 அன்று பூவிருந்தவல்லியில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் மிகச் சிறப்பாக நடந்தேறின.
வழக்கம் போல் மிகப்பெரும் எண்ணிக்கையில் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பரிசீலித்து ஏற்கப்பட்டன. சேவா விருதுகள் வழங்கப்பட்டன.
குழு கூட்டங்களின் புகைப்படங்கள் இந்த இதழில் வேறு பக்கங்களில் விரிவாக பரிசுரிக்கப்பட்டுள்ளன.
மாநில சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கீழே கொடுத்துள்ளேன் :
1. மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான (EWS) 10 சதவீத (10%) இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று நமக்கு எழுத்து வழியாக தெரிவித்துள்ளது. இந்த முடிவினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும் EWS 10% இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தி முற்பட்ட சமூகங்களின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களுக்கும் வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
2. கேரள அரசு நியமித்திருக்கினற அடிப்படையில் தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சார்ந்த நலிந்தோருக்கு உதவிடும் வகையில் ஓர் தனி நல வாரியம் அமைத்திட தமிழக அரசினை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
3. மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பயன் அளித்திடும் “நவோதயா” பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கிட தேவையான ஒத்துழைப்பினை மத்திய அரசிற்கு வழங்கிடுமாறு தமிழக அரசினை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது. இதன் பலனாக கிராமப்புற மாணவ, மாணவிகள் நகர்ப்புற மாணவ, மாணவிகளுக்கு சரிசமமாக நீட் போன்ற தேர்வுகளில் பரிமளிக்க முடியும் என்பதனை இந்த பொதுக்குழு முன்னிலைப்படுத்துகின்றது.
4. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு / கன்னடம் / மலையாளம் / ஹிந்தி / சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களை விருப்பப் பாடமாக (Optional Subject) கற்றுக் கொடுத்திட தமிழக அரசு முன்வந்திட வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
5. அரசின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள தமிழக கோவில்களை, மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரித்திட உதவிடும் வகையில், அவைகளை ஓர் தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைத்து நிர்வகித்திட இப்பொதுக்குழு கோருகின்றது. அதற்கான முதல்படியாக தன்னாட்சி வாரியத்திற்கான வழிமுறைகள், நெறிமுறைகள், நிர்வாக அமைப்பு ஆகியவைகளை பரிந்துரை செய்திட ஓர் தக்க நிபுணர் குழுவினை அமைத்து செயல்பட இந்த பொதுக்குழு வேண்டுகின்றது. தமிழக ஹிந்துக்களின் நெடுநாளைய இந்த கோரிக்கையினை நிறைவேற்றிக் கொடுத்திட தமிழக அரசு முன்வந்திட வேண்டும் என்று இந்த பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
6. தமிழகத்தில் கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும், மகளிருக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. சமூக விரோதிகள் பள்ளி/கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தற்கு அடிமையாக்குவதும் அவர்களை சட்ட விரோத போதை பொருட்களை விநியோகம் செய்திட பயன்படுத்துவதும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகின்றது. எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக எடுத்து போதை பொருட்கள் நடமாட்டத்தினை முழுவதுமாக தடுத்து நிறுத்திட இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
7. பாரதத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மற்றும் தாய் தமிழ்மொழிக்கும் அருந்தொண்டு ஆற்றிய, ஆற்றி வருகின்ற பிராமண சமூகத்தினரின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை, ஒரு சில இயக்கங்கள், தனி நபர்கள், தனியார் ஊடகங்கள் மேலும் குறிப்பாக சில கட்சிகளின் நிர்வாகிகள், நக்கல் செய்வதும் மற்றும் கொச்சைப்படுத்துவதும் அதிகமாகி வருவதனை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
மத்திய அரசும், தமிழக அரசும் இது போன்ற சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்திட ஓர் தனி சட்டம் இயற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.
இந்த தீர்மானங்கள் மீதான மேல் நடவடிக்கைகளை மாநிலத் தலைமை எடுத்து வருகின்றது என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)